(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ 19 - இவ்வாண்டு தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வை மூன்று இடங்களில் ரவாங் சட்டமன்றத் தொகுதி நடத்துகிறது. தொகுதியின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
ரவாங் கன்றி ஹோம்ஸ் பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்த தீபாவளி பொது உபசரிப்பு மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்வு பத்து ஆராங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்டது.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வுகளில் பல்லினங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மூன்றாவது நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி இரவு 7.31 மணிக்கு கம்போங் கோல காரிங் சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த உபசரிப்பில் வட்டார மக்கள் கலந்து சிறப்பிக்கும்படி சுவா கேட்டுக் கொண்டார்.
செலாயாங் நாடாமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த தீபாவளி உபசரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.


