ஷா ஆலம், நவ. 15- இலவச டியூஷன் திட்டத்தை அடுத்தாண்டு தொடர்வதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்திற்கு (எம்.பி.ஐ.) 2025 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் ஒதுக்கீட்டின் வாயிலாக பி.டி.ஆர்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மக்கள் டியூஷன் ராக்யாட் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 1 கோடி வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டம் பயன்மிக்கது என்பது கடந்த 2023ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளின் வழி உறுதி செய்யப்பட்டது. 2023ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் மாநிலத்தில் உள்ள மாணவர்களின் அடைவு நிலை 91.14 விழுக்காடாக உயர்வு கண்டது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 89.2 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்று அவர் சொன்னார்.
பி.டி.ஆர்.எஸ். மாணவர்களைப் பொறுத்த வரை கடந்த 2023ஆம் ஆண்டு 3,552 மாணவர்கள் ஏ கிரேடு பெற்றனர். இது கடந்த 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் சிறந்த அடைவு நிலையாகும் என்றார் அவர்.
இவ்வாண்டு நான்காம் மற்றும் ஐந்தாம் படிவம் பயிலும் 130,000 பி.டி.ஆர்.எஸ். திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


