ஷா ஆலம், நவ. 15- உயர் கல்வி நிலையங்களில் நுழையும் மாணவர்களுக்கு வெகுதியாக 1,000 வெள்ளியை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அடுத்தாண்டும் தொடவிருக்கிறது. இத்திட்டத்திற்கு வரும் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரைச் சேர்ந்த மாணவர்களுக்கான இந்த பிரத்தியேக உயர்கல்விக் கூட வெகுமதி திட்டத்திற்கு மாநில அரசு கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கி 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்து வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பயன் பெற முடியும் என்று மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு குடும்ப வருமானம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு 6,023 மாணவர்கள் விண்ணப்பம் செய்த வேளையில் அவர்களில் 3,000 பேர் வெகுமதியைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றனர்.


