ஷா ஆலம், நவ 11- சுற்றுலா நடவடிக்கைத் திட்டத்தை ஷா ஆலம் மாநகர்
மன்றம் அறிமுகப்படுத்தியப் பின்னர் அடுத்தாண்டு தொடங்கி இம்மாநகர்
சுற்றுப்பயணிகளை ஈர்க்கக்கூடிய பல்வேறு மையங்களை கொண்டிருக்கும்.
இதன் தொடர்பில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கடந்த மாதம்
ஆய்வை மேற்கொண்ட நிலையில் அந்த ஆய்வு தொடர்பான முழு
அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக மாநகர் மன்றத்தின் சமூகவியல்
மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஷாரின் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் இலக்கிடப்பட்டத் தரப்பினருடன் குறிப்பாக,
தனியார், பொது சேவைத் துறைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன்
ஹோட்டல் மற்றும் சுற்றுலா புலத்தின் வாயிலாக அந்த உயர்கல்விக்
கூடம் பேச்சு நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநகரில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு
ஆலோசனைகளை இந்த சம்பந்தப்பட்டத் தரப்பினர் முன்வைத்தனர். புதிய
சுற்றுலா மையங்களை அடையாளம் காணும் அதேவேளையில்
தற்போதுள்ள மையங்களை தரம் உயர்த்துவது நமது நோக்கமாகும் என்று
அவர் சொன்னார்.
இந்த ஆய்வறிக்கை இவ்வாண்டு இறுதிவாக்கில் தங்களுக்கு கிடைக்கும்
என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக நேற்று இங்கு நடைபெற்ற
வாகனபயன்பாடு இல்லா தின நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் தெரிவித்தார்.
புதிய கொள்கை மற்றும் திட்டத்தை வரைவதற்கு முன்னர் யு.ஐ.டி,எம்.
அனைவரின் கருத்துகளையும் ஆய்வு செய்து வருகிறது. மாநில அரசின்
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு இயக்கத்திற்கு எங்களின்
இந்த முயற்சிக்கு துணை புரியும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
கடந்த மாதம் நடைபெற்ற ஷா ஆலமிலுள்ள சுற்றுலா மையங்கள்
தொடர்பான குழு நிலையிலான சந்திப்பு மற்றும் மதிபீட்டு நிகழ்வில்
சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.


