சுபாங் ஜெயா, நவ. 5- சிலாங்கூரில் தற்போது 900க்கும் அதிகமான மின்சார வாகன (இ.வி.) சார்ஜர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 1,000ஆக உயர்த்தும் இலக்கை சிலாங்கூர் நெருங்கி வருகிறது.
மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வரும் போக்கைத் தொடர்ந்து மேலும் அதிகமான இ.வி. சார்ஜர்கள் மையங்கள் நிறுவப்படும் என்று முதலீட்டுத் தூறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
இதுவரை, மலேசியாவில் சுமார் 25,000 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மலேசியாவில் தற்போது 41 வாகனங்களுக்கு ஒரு சார்ஜர் என்ற விகிதாசார அடிப்படையில் உள்ளது. அமெரிக்காவில் இந்த விகிதாசாரம் 20:1 ஆகவும் சீனாவில் 2.5:1 ஆகவும் உள்ளது. ஆகவே நாம் வளர இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உதவும் மாநில அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப எதிர்காலத்தில் சிலாங்கூர் முழுவதும் பல இ.வி.சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
கின்ராரா கோல்ஃப் கிளப்பில் நேற்று நடைபெற்ற இ.வி. வாகன சார்ஜர் திறப்பு விழாவின் போது அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் கிராம மேம்பாடு, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இவ்வாண்டு இறுதியில் மின்சார வாகனத்தை தயாரிக்கும் பெருசாஹான் ஆட்டோமோபில் கெடுவா சென்டிரியன் பெர்ஹாட் (பெரோடுவா) மற்றும் பெருசாஹான் ஆட்டோமோபில் நேஷனல் (புரோட்டான்) நிறுவனங்களின் முயற்சியின் விளைவாக இ.வி. வாகன சார்ஜர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இறுதியில், பெரோடுவா மற்றும் புரோட்டான் அறிமுகம் செய்யும் இ.வி. வாகனங்கள் குறைந்த விலையைக் கொண்டிருக்கும், எனவே இ.வி. வாகன சார்ஜர்களுக்கான தேவை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்றார் அவர்.


