ஷா ஆலம், நவ. 4 - இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 2024
சிலாங்கூர் வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (சிப்ஸ்) இரண்டாம் தொடரின்
வாயிலாக 166 கோடி வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனை பதிவு
செய்யபட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி
ஹான் கூறினார்.
இம்மாநாட்டில் பதிவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொடக்க இலக்கான
80 கோடி வெள்ளியைக் காட்டிலும் இது ஏறக்குறைய 50 விழுக்காடு
அதிகமாகும் என அவர் சொன்னார்.
உணவு மற்றும் பான துறையின் வழி 60 கோடி வெள்ளியும் மருத்துவத்
துறையின் வழி 1.5 கோடி வெள்ளியும் விவேக நகர் மற்றும் இலக்கவியல்
பொருளாதாரத்தின் வழி 200 கோடி வெள்ளியும் பரிவர்த்தனை
செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு புத்துயிரூட்டும்
ஆற்றலையும் பல்வேறு தொழில்துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கும்
திறனையும் மாநில அரசு கொண்டுள்ளதை இந்த அடைவு நிலை
நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் நாம் ஒன்றிணைந்து சிறப்பான
எதிர்காலத்தை உருவாக்குவோம் என அவர் தனது பேஸ்புக் பதிவில்
கூறியுள்ளார்.
இந்த சிப்ஸ் உச்சநிலை மாநாடு கடந்த அக்டோபர் 16 முதல் 20 வரை
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. தொழில் துறைக்கான
ஆசியான் மற்றும் அனைத்துலக நுழைவாயிலாக உருவாகும் மாநில
அரசின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் நோக்கில் இந்த அனைத்துலக
மாநாடு நடத்தப்படுகிறது.
இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாட்டில் இவ்வாண்டு ஜூலை 25 முதல் 27
வரை நடைபெற்ற சிப்ஸ் மாநாட்டின் முதல் தொடரில் 1,220 கோடி
வெள்ளி மதிப்பிலான வர்த்தகம் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக
நிர்ணயிக்கப்பட்ட 700 கோடி வெள்ளி இலக்கை விட இது சுமார் இரண்டு
மடங்கு அதிகமாகும்.


