(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 29 - ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்த மாநில அரசு அமல்படுத்தி வரும் பல்வேறு உதவித் திட்டங்களை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய சமூகத்தை கோத்தா
கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.
மாநில மக்களின் நலன் காக்க சிலாங்கூர் அரசு இல்திஸாம் சிலாங்கூர்
பென்யாயாங் முன்னெடுப்பின் கீழ் 49 உதவித் திட்டங்களை அமல்படுத்தி
வருவதாக அவர் சொன்னார்.
மாநில அரசின் உதவித் திட்டங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான
பேருந்து கட்டணம், ஐ-சீட் எனப்படும் இந்திய சிறு வணிகர்களுக்கான
வர்த்தக உபகரண உதவித் திட்டம், ஏழ்மை நிலையிலுள்ள உயர்கல்வி
மாணவர்களுக்கான நிதியுதவித் திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று
அவர் தெரிவித்தார்.
நமது சமூகம் இன்னும் குறைந்த வருமானம் பெறும் பி40 வட்டத்திற்குள்
தொடர்ந்து இருப்பதைக் காண நான் விரும்பவில்லை. அந்த
வட்டத்திலிருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை சமூகம் நன்கு
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய சமூகம் உயர்வு காண்பதற்கு ஒரே சிறந்த வழி கல்வியாகும்.
ஆகவே உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் தாருங்கள்.
கல்வியில் மட்டுமின்றி திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும்
தொழில்திறன் பயிற்சித் திட்டங்களில் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை
முறையாகப் பயன்டுத்திக் கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.
இங்குள்ள புக்கிட் கெமுனிங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற்ற வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதி
சார்பாக 1,600 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மாநில அரசு சார்பாக 450 பேருக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்
சீட்டுகள் வழங்கப்பட்ட வேளையில் தொகுதி சேவை மையம் மற்றும்
பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் எஞ்சியோருக்கு உணவுக் கூடைகள்
மற்றும் ரொக்க அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
புக்கிட் கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஆதரவுடன் ஷா
ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் திருமதி லோகேஸ்வரி சாமிநாதன்
ஏற்பாடு செய்திருந்த இந்த தீபாவளி உதவிப் பொருள் வழங்கும் நிகழ்வில்
30 பேருக்கு உணவுக் கூடைகளும் 10 பேருக்கு தலா 100 வெள்ளி
மதிப்பிலான பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.


