ஷா ஆலம், அக்டோபர் 29 - மனச்சோர்வு மற்றும் மனநலப் பிரச்சனைகளைத் தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலாங்கூர் மனநல (சேஹாட்) திட்டத்தின் மூலம் சேஹாட் ஹப் ஆலோசகர்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இலவச ஆலோசனை சேவைகளை வழங்கும் இந்த முன்னோடி திட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நான்கு மணி நேரம் நடைபெறுகிறது என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த திட்டம் மலேசிய அனைத்துலக ஆலோசகர் சங்கம் (பெர்காமா) மற்றும் சிலாங்கூர் சுகாதார சமூக தன்னார்வலர்கள் அமைப்பு (சுகா) ஆகியவற்றுடன் இணைந்து அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி இந்த முன்னோடித் திட்டம் தொடங்கியது. இத்திட்டத்தின் விளைவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்து மேம்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு, அடுத்த ஆண்டு இந்த திட்டத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து ஆலோசிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசு செயலக நிலையிலான உளவியல் தினம் மற்றும் பொது சேவை வழிகாட்டி தின (அக்ராப்) நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலச் செயலகக் கட்டிடத்தில் உள்ள டேவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற 'பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை' என்ற கருப்பொருளிலான இந்த நிகழ்ச்சியை மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் தொடக்கி வைத்தார்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேஹாட் ஹப் ஆலோசகர்களின் சேவைகளை நாடியுள்ளதாக கூறிய ஜமாலியா, இது திட்டத்திற்கான நேர்மறையான வரவேற்பை இது குறிக்கிறது என்றார்.
சேஹாட் ஹப் ஆலோசகச் சேவை தொடர்ந்து வலுவான சமூக ஆதரவைப் பெற்றால் அனைத்து தொகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் சொன்னார்.
சில தனிநபர்கள் ஆலோசனை நிபுணர்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புவதன் விளைவாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆகவே நாங்கள் மக்களுக்கு நெருக்கமான இடங்களில் இந்த ஆலோசனை மையங்களை அமைத்துள்ளோம் என்று ஜமாலியா கூறினார்.
பண்டார் உத்தாமா, பண்டமாரன், சுங்கை துவா, பாண்டன் இண்டா, சுங்கை பீலேக், கோல குபு பாரு, சுங்கை ஆயர் தாவார், ஈஜோக் மற்றும் மோரிப் ஆகிய தொகுதிகளில் உள்ள சமூக சேவை மையங்களும் இவற்றில் அடங்கும் என்றார் அவர்.


