(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 28 - கோத்தா டாமன்சாரா தொகுதி ஏற்பாட்டில் வசதி
குறைந்த பி40 தரப்பைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கு நேற்று தீபாவளி
பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
கோத்தா டாமன்சாரா, ஜெயண்ட் பேரங்காடியில் நடைபெற்ற இந்த
நிகழ்வுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஸூவான் காசிம் தலைமை
தாங்கினார். இந்நிகழ்வில் சுங்கை பூலோ தொகுதி முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, கவுன்சிலர்கள், இந்திய சமூகத்
தலைவர்கள் மற்றும் மஇகா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட அனைவரும் ஜெயண்ட்
பேராங்காடியில் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை
வாங்கிக் கொண்டனர்.
வசதி குறைந்தவர்களும் தீபாவளியை மகிழ்ச்சியைக் கொண்டாட
வேண்டும் எனும் நோக்கில் இந்த பற்றுச் சீட்டுகளை தாங்கள்
வழங்கியதாகக் கோத்தா டாமன்சாரா தொகுதி இந்திய சமூகத் தலைவர்
திருமதி தேவி முனியாண்டி கூறினார்.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்திலுள்ள
அனைத்து 56 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 200 வெள்ளி மதிப்புள்ள 22,000
ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த
திட்டத்தை அமல் செய்வதற்கு 44 லட்சம் வெள்ளியை அது ஒதுக்கீடு
செய்துள்ளது.


