SELANGOR

பெட்டாலிங் ஜெயாவுக்கு பிரத்தியேக மருத்துவமனை தேவை - மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை

23 அக்டோபர் 2024, 8:44 AM
பெட்டாலிங் ஜெயாவுக்கு பிரத்தியேக மருத்துவமனை தேவை - மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை

ஷா ஆலம், அக். 23- பெட்டாலிங் ஜெயாவுக்கு பிரத்தியேகமாக

மருத்துவமனை தேவை என்று நாட்டில் மிக அதிக மக்கள் தொகையைக்

கொண்ட அந்த மாநகரின் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பான மருத்துவச் சேவையைப் பெறுவதற்குரிய வாய்ப்பு இந்நகர

மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இம்மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும்

முதியோர் எண்ணிக்கையை சுட்டிக்காட்டிய அவர்கள், நடப்பிலுள்ள

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் காத்திருக்கும்

நேரமும் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.

இங்குள்ள நோயாளிகள் தற்போது மலாயா பல்கலைக்கழக மருத்துவ

மையத்தை (பி.பி.யு.எம்.) பெரிதும் சார்ந்திருப்பதாக இந்த கோரிக்கையை

முன்வைத்திருக்கும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய்

கூறினார்.

இந்த மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை நோயாளிகளுக்கு

சிகிச்சைளிப்பதற்கான முழு வசதி கொண்ட மருத்துவமனையாக

அல்லாமல் பல்கலைக்கழக மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை தவிர்த்து அருகிலுள்ள சுகாதார கிளினிக்குகளுக்கு

சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அல்லது ஷா ஆலம், சுங்கை பூலோ

மற்றும் செலாயாங் மருத்துவமனைகளை அவர்கள் நாடி வேண்டும் என்று

அவர் சொன்னார்.

இந்த மருத்துவமனைகள் யாவும் தொலைவில் உள்ளன. மேலும் மலாயா

பல்கலைக்கழக மருத்துவமனையில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது

என்று அவர் சிலாங்கூர் ஜர்னல் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்ற

13வது மலேசியத் திட்டத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வின் போது லிம்

இந்த பரிந்துரையை பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியிடம்

முன்வைத்தார்.

நகர விரிவாக்கம் காரணமாக பெட்டாலிங் ஜெயாவில் மருத்துவமனை

நிர்மாணிக்கப்படுவது அவசியம் என்பதை ஒப்புக் கொண்ட ரபிஸி, எனினும்

பொருத்தமான நிலம் கிடைப்பதும் அதனை ஆர்ஜிதம் செய்வதில்

உண்டாகும் செலவினமும் பெரும் சவாலாக உள்ளதாகச் சொன்னார்.

இதனிடையே, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோன்

சுங்கும் இதே பிரதிபலித்தார். மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில்

போதுமான படுக்கைகள் இல்லாதிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்

பெட்டாலிங் ஜெயாவுக்கு பிரத்தியேக மருத்துவமனை இருப்பது அவசியம்

என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.