(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 23 - இம்மாத இறுதியில் கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலு சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள
மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 116 குடும்பங்களுக்கு தேசிய ஒற்றுமைத்
துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி உணவுப்
பொட்டலங்களை வழங்கினார்.
மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெஸ்தாரி
மேரித் தோட்டம், புக்கிட் தாகார் மற்றும் நைகல் கார்டனர் ஆகிய
தோட்டங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு உதவிப்
பொருள்களைப் பெற்றனர்.
தீபாவளியின் போது வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்
எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த
உதவித் திட்டத்தை தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு
முன்னெடுத்துள்ளதாக செனட்டர் சரஸ்வதி கூறினார்.
இந்த திட்டத்திற்கு மைடின் பேரங்காடி ஆதரவை வழங்கிய வேளையில்
தாமும் பொருளாதார ரீதியாக பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர்
குறிப்பட்டார்.
இந்த தீபாவளி அன்புளிப்பு வழங்கும் நிகழ்வின் “சந்துனி மடாணி“
திட்டத்தின் தொடக்க கட்டமாகவும் விளங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ்
மேரித் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம் மற்றும் நைகல் கார்டனர்
தோட்டம் ஆகிய மூன்று தோட்டங்களை நான் தத்தெடுத்துள்ளேன்.
வட்டார மக்களிடையே நிலவும் ஏழ்மை, படிப்பை பாதியில் கைவிடுவது,
சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதாரப்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை இந்த திட்டம் பிரதான நோக்கமாகக்
கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிறப்பான எதிர்காலத்திற்கு கல்வியே அடித்தளமாக விளங்குவதால்
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்து
வெற்றி பெற்ற மற்றும் மதிக்கத்தக்க சமூகமாக நாம் உருவாக முடியும்
என்றார் அவர்.


