(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 21- பத்து தீகா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற தீபாவளி சிறப்பு ஏஹ்சான் ரஹ்மா விற்பனைக்கு வட்டார இந்தியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
இங்குள்ள பாடாங் ஜாவா, ரிம்பா ஜெயா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் சுமார் 450 பேர் கலந்து கொண்டதாக பத்து தீகா தொகுதி இந்திய சமூகத் தலைவர் பி.சதாசிவம் கூறினார்.
இந்த தீபாவளி சிறப்பு விற்பனையில் இந்தியர்களின் பங்கேற்பு மனநிறைவு அளிக்கும் வகையில் இருந்ததாகக் கூறிய அவர், அவர்களில் பலர் இந்த விற்பனையில் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும் என்றார்.
இந்த விற்பனையில் அரசி, கோழி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுவது கண்டு அவர்கள் பெரிதும் வியப்படைந்தனர். இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட் மற்றும் மாநில அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் என்றார் அவர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தொகுதி இந்தியர்களின் வசதிக்காக இந்த சிறப்பு மலிவு விற்பனைக்கு தொகுதி சட்டமன்ற டேனியல் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்ததாகவும் அவர் சொன்னார்.
உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஆதரவுடன் சிலாங்கூர் மாநில விவசாய மேம் பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனை குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய வாய்ப்பை வழங்குகிறது.
இந்த விற்பனையில் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


