(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 17- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்
நடைபெறும் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரம் பாடல் திறன் போட்டியின்
இறுதிச் சுற்றுக்கு பத்து போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
இப்போட்டியாளர்கள் அனைவரும் புக்கிட் ஜாலில் அரங்கில் வரும்
அக்டோபர் மாதம் 27ஆம் இறுதிப் போட்டியில் களம் காணவுள்ளனர்.
நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் 178 பேர் பங்கு
கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தியதாக செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் கூறினார்.
இரு வாரங்களுக்கு முன்னர் கிள்ளானில் நடைபெற்ற அரையிறுதிச்
சுற்றில் இருபது பேர் தேர்வான வேளையில் அவர்களில் பத்து பேர் கடந்த
வாரம் நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்
என்று அவர் தெரிவித்தார்.
இந்த பத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ளும் இறுதிச் சுற்றுப்
போட்டியை புக்கிட் ஜாலில் அரங்கில் வெகு சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொள்ள மாநில மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர்
சொன்னார்.
வயது 9 முதல் 15 வயது வரையிலான சிறார்களை இலக்காக கொண்ட இப்போட்டியில்
சிலாங்கூர் மட்டுமின்றி பினாங்கு, மலாக்கா, பேராக் மற்றும் ஜோகூர்
போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களும் பங்கு
கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இளையோர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிப்படுத்துவதையும் அவர்களுக்கு தன்னக்கையையும் தைரியத்தையும் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இப்போட்டியை நாங்கள் நடத்தி வருகிறோம் அவர் தெரிவித்தார்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோரை போட்டிக்கு தயார் படுத்தும் வகையில்
ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு மூத்த கலைஞர் குருவாக நியமிக்கப்படுவார்
என்றார் தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் விண்வெளி கலை மன்றம்,
சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகிய அமைப்புகளின்
ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த போட்டியில் முதல் பரிசாக 2,000 வெள்ளியும்
இரண்டாம் பரிசாக 1,500 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 1,000 வெள்ளியும் ஆறுதல் பரிசாக
500 வெள்ளியும் வழங்கப்படும்.
கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற
இளம் கலைஞர்கள் தமிழகத் தொலைக்காட்சிகளில் தோன்றி தங்களின்
திறனை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றதாகவும் அவர்
குறிப்பிட்டார்.


