(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக் 16 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூரிலுள்ள
வசதி குறைந்த குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 200 வெள்ளி
மதிப்பிலான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் ஸ்ரீ செர்டாங் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 400 பற்றுச்
சீட்டுகளை தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் சலிம்மி சே அஸ்மி
தலைமையில் ஸ்ரீ கெம்பாங்கான் ஜயண்ட் பேரங்காடியில் வார இறுதியில்
நடைபெற்றது.
பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட அனைவரும் தீபாவளிக்குத்
தேவையான அத்தியாவசியப் பொருள்களை அப்பேரங்காடியில் வாங்கிக்
கொண்டனர்.
மாநில அரசின் திட்டங்களில் எந்த இனமும் விடுபடவில்லை என்பதை
நிருபிக்கும் வகையில் இந்த தீபாவளி பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வு
அமைவதாக சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் குறிப்பிட்டார்.
மாநில அரசின் திட்டங்களில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஒரு
அங்கமாக உள்ளதை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும்
கூறினார்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு வழங்குவதற்காக 44 லட்சம் வெள்ளி செலவில் தலா 200 வெள்ளி மதிப்பிலான 22,000 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு 56 தொகுதிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளது..


