ஷா ஆலம், அக். 8- வெள்ளப் பிரச்சினை காரணமாக மாநிலத்தில் முதலீடு
பாதிக்கலாம் என அச்சம் தெரிவித்து சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி
இளைஞர் பிரிவுத் தலைவர் வெளியிட்ட அறிக்கையை மந்திரி புசாரின்
அரசியல் செயலாளர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிலாங்கூர் மாநில 1,240 கோடி வெள்ளி
முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறிய சைபுடின் ஷாபி, கடந்தாண்டின்
இதே காலக் கட்டத்தில் பதிவான 744 கோடி வெள்ளி முதலீட்டுடன்
ஒப்பிடுகையில் இது 66.8 விழுக்காடு அதிகமாகும் என்றார்.
மொத்தம் 363 திட்டங்களை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக
8,377 வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதை மலேசிய முதலீட்டு
மேம்பாட்டு வாரியத்தின (மிடா) அறிக்கை காட்டுகிறது. இந்த வேலை
வாய்ப்புகளில் ஒரு பகுதியை சிலாங்கூருக்கு புலம் பெயர்ந்த பாஸ் ஆட்சி
புரியும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிரப்புகின்றனர் என்று அவர்
குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.9
விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் வழங்கியதை மலேசிய புள்ளி
விபரத் துறையின் அறிக்கை காட்டுகிறது. அதற்கு முந்தைய ஆண்டில்
இந்த பங்களிப்பு 25.5 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
என்றார் அவர்.
ஆகவே. சிலாங்கூர் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்து
வருவதாக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது சுக்ரி
ஓமார் வெளியிட்ட கருத்து தவறானது என்பதோடு குரோத
நோக்கத்தையும் கொண்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்படும் வெள்ளத்தை முதலீட்டுடன் தொடர்பு
படுத்தும் அந்த அறிக்கை விவேகமற்றது என்பதோடு முட்டாள்தனமாகும்
ஆகும் என்று அவர் சாடினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு ஏதுவாக ஆட்சிக்குழு
உறுப்பினர்கள் மற்றும் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தயார் நிலையில் இருந்து வருவதாகவும்
அவர் சொன்னார்.
சுக்ரி ஒமாரின் கருத்தை கவனத்தில் கொண்டால், பாஸ் கட்சி கடந்த 30
ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் கிளந்தான் மாநிலம் ஏன் மேம்பாடு
காணவில்லை என்பதை புரிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.


