(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 3 - இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசினால் வழங்கப்படும் இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு களுக்கு நாளை 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க பத்து தீகா தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு கடந்த மாதம் 23ஆம் தேதி
திறக்கப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம்
நாளையுடன் முடிவுக்கு வருவதாக பத்து தீகா தொகுதி இந்திய சமூகத் தலைவர் பி.சதாசிவம் கூறினார்.
பொது மக்களிடமிருந்து கிடைக்க பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பற்றுச் சீட்டு களை வழங்கும் நிகழ்வு வரும் அக்டோபர் 19ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை ஷா ஆலம், கெமுனிங் உத்தாமா, ஜெயண்ட் பேரங்காடியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் தலைமையில்
நடைபெறும் என்று அவர் சொன்னார்.
தீபாவளியை பண்டிகையைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவரகள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் மாநில அரசு தலா 200 வெள்ளி மதிப்பிலான 400 இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை பத்து தீகா தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.
மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ். மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு பெறாத தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் பத்து தீகா தொகுதி வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் கணவர் மற்றும் மனைவியின் அடையாளக் கார்டு, சம்பள விபர அறிக்கை ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவசப் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்.