ஷா ஆலம், அக் 3: 2025 சிலாங்கூருக்கு வருகை தரும் ஆண்டு இயக்கத்திற்கான முன்
ஏற்பாடாக இந்த ஆண்டு முழுவதும் ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அதன் பகுதியில்
சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்.
நகர மையத்தில் தாமான் போக்கட் அமைப்பது, ஷா ஆலம் சுற்றியுள்ள
ரவுண்டானாவை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் தாமான் கதோபியா, லாமன் சைஃபா,
தாமான் அங்கெரிக் ஆகிய பொழுதுபோக்கு பூங்காக்களை மேம்படுத்துவது ஆகியவை
முன் ஏற்பாடு நடவடிக்கைகளில் அடங்கும் என்று செயல் துணை மேயர் கூறினார்.
இந்த திட்டமானது இயற்கையை அழகுபடுத்த உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில்,
சிலாங்கூர்-ஜப்பான் நட்பு பூங்காவில் சுற்றுலா தயாரிப்புகள், ஆர்ட் கேலரி 7 இல்
சுவரோவியங்கள், ஷா ஆலம் ஜிப்லைன் மற்றும் மியூசிக்கல் ஃபவுஷன் கலாச்சார
தொகுப்பு ஆகியவற்றை எம் பிஎஸ்ஏ மேற்கொள்ளும்.
இது ஷா ஆலமிற்கு வருகையாளர்களை ஈர்க்கும் ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம்
அடுத்த ஆண்டு எட்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய மாநில
அரசுக்கு உதவ முடியும் என்று அவர் கூறினார்.
இன்று பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட
ஷா ஆலம் சுற்றுலா தலங்களின் இலக்கு குழு விவாதம், மதிப்பீட்டு ஆய்வு மற்றும்
விவரங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்து பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
டிஎம்எஸ் 2025 உடன் இணைந்து, விளம்பரம், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள்,
சுற்றுலா நிகழ்வுகள், சாலைக் காட்சிகள் மற்றும் விளம்பர நோக்கங்களுக்காக
கண்காட்சிகள் போன்ற பல்வேறு பணிகளை மாநில அரசு மேற்கொள்கிறது.
அடுத்த ஆண்டு முழுவதும் 60க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்கும் டிஎம்எஸ் 2025 ,
RM11.7 பில்லியன் வருவாய் சேகரிப்புடன் எட்டு மில்லியன் உள்நாட்டு மற்றும் சர்வதேச
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


