உலு லங்காட் செப். 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள முப்பது சட்டமன்றத்
தொகுதிகளில் நடத்தப்பட்ட மாநில அரசின் இலவச மருத்துவப்
பரிசோதனைத் திட்டத்தின் வழி ஆயிரக்கணக்கானோர் பயனடைந்ததாகப்
பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடின் கூறினார்.
மேலும் அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாக இதரத்
தொகுதிகளிலும் இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தை மேற்கொள்வதற்கான
நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர்
சொன்னார்.
எனது அலுவலகத்துடன் நேரடி ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்குரிய
வாய்ப்பினை கிராமத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலம் இத்தகைய இலவச மருத்துவப்
பரிசோதனைத் திட்டங்களை அதிகளவில் மேற்கொள்ள மாநில
திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தொகுதி சமூக சேவை மையங்களின் அங்கீகாரத்திற்கு
காத்திராமல் இத்தகைய மருத்துவப் பரிசோதனைத் திட்டங்களை அவர்கள்
சுயமாக மேற்கொள்ள இயலும். 100க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள்
இருக்க வேண்டும் என்பதுதான் இதில் விதிக்கப்படும் ஒரே நிபந்தனையாகும். இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கங்களை ஏற்பாடு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள பண்டார் டெக்னோலோஜி காஜாங் சமூக மண்டபத்தில்
நடைபெற்ற மலேசியா மடாணி மினி மருத்துவ விழாவில் உரையாற்றிய
போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிலாங்கூர் சாரிங் மருத்துவப்
பரிசோதனை இயக்கங்களில் கண்டு பிடிக்கப்பட்ட பொதுவான உடல்
நலக் குறைபாடுகளில் நீரிழிவு மற்றும் கொலேஸ்ட்ரோல் பிரச்னைகளே
முக்கிய இடத்தைப் பிடித்ததாக அவர் சொன்னார்.
இந்த மருத்துவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின்
முடிவுகள் செலங்கா செயலி வாயிலாக சம்பந்தப்பட்ட
பங்கேற்பாளர்களுக்கு அனுப்பப்பட்டு அருகிலுள்ள அரசாங்க
கிளினிக்குகளில் தொடர் பரிசோதனை மேற்கொள்ள அவர்கள்
அறிவுறுத்தப்படுவர் என்றார் அவர்.


