SELANGOR

ஆலம் மேகாவில் நடைபெற்ற சொக்சோ விளக்கமளிப்பு நிகழ்வில் 70 பேர் பங்கேற்பு

24 செப்டெம்பர் 2024, 9:31 AM
ஆலம் மேகாவில் நடைபெற்ற சொக்சோ விளக்கமளிப்பு நிகழ்வில் 70 பேர் பங்கேற்பு
ஆலம் மேகாவில் நடைபெற்ற சொக்சோ விளக்கமளிப்பு நிகழ்வில் 70 பேர் பங்கேற்பு

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், செப். 24 - கோத்தா கெமுனிங் இந்திய சமூகத் தலைவர்  (கே..கே.ஐ.) எம்.கோபியின் ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 28, ஆலம் மேகா, ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சொக்சோ விளக்கமளிப்புக் கூட்டத்தில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 70 பேர் பங்கு கொண்டனர்.

சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த விளக்கமளிப்பு நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் இல்லத்தரசிகள் மற்றும் சுயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சொக்சோவின் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இத்திட்டத்தில் கவரப்பட்டு அதில் சேர்வதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்திய வேளையில் சுமார் இருபது பேர் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் உடனடியாகப் பதிந்து கொண்டு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றதாக கோபி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் வழி கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பில் அதிகாரிகள் வழங்கிய விளக்கமளிப்பு தங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறினர். விரைவில் இணையம் வாயிலாக இத்திட்டத்தில் சேர்வதற்கான தங்களின் விருப்பத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

இது போன்ற பயன் மிக்கத் திட்டங்களைத் தாங்கள் தொடர்ந்து நடத்த உள்ளதாக கூறிய அவர், இதர  சமூக அமைப்புகளும் தங்கள் வட்டாரத்தில் இத்தகைய நிகழ்வுகளை நடத்தினால் பயன்மிக்கதாக இருக்கும் என்றார்.

இந்திய சமூகத் தலைவர் என்ற முறையில்  இத்தொகுதியில் தாம் இவ்வாண்டு நடத்தும் ஐந்தாவது நிகழ்வு இதுவாகும் எனக் குறிப்பிட்ட அவர், இது போன்ற திட்டங்களை அமல் செய்வதில் தங்களுக்கு பெரிதும் துணை புரிந்து வரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.