SELANGOR

குளோபல் இக்வான் நிறுவன உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது

19 செப்டெம்பர் 2024, 3:37 AM
குளோபல் இக்வான் நிறுவன உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது

கோலாலம்பூர்,  19 -  குளோபல் இக்வான்  ஹோல்டிங்ஸ் (ஜி.ஐ.எஸ்.பி.) நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை  தாய்லாந்து - புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையில் நேற்று மாலை 6.00 மணியளவில் கைது செய்த போலீசார், அந்த நிறுவனத்தின் சின்னம் கொண்ட  மோட்டார் ஹோம் எனப்படும் தங்கும் வசதி கொண்ட இரண்டு ஆடம்பர வாகனங்களைக் கைப்பற்றினர்.

அந்த இரண்டு வாகனங்களும் X31337 மற்றும் X37313 என்ற பதிவு எண்களைக் கொண்டிருந்தாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

வடக்கு மண்டல எல்லை உளவு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பயனாக இந்த  கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.

அந்த வாகனங்கள் தாய்லாந்திற்குச் செல்லும் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகம் நோக்கிச் செல்வது கண்காணிப்பின் மூலம் தெரியவந்தது.

கெடா மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர்  மேற்கொண்ட சோதனையின் விளைவாக அந்த  வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 28 முதல் 41 வயதுடைய ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு ஒரு மைவி காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார் அவர்.

கைது செய்யப்பட்டவர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக குபாங் பாசு போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று பெர்னாமா நேற்றிரவு தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர்  அந்த நிறுவனத்தின் தலைவர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள  ஜி.ஐ.எஸ்.பி.யுடன் தொடர்புடைய 20 தொண்டு இல்லங்களில்  சோதனை நடத்தி ஒன்று முதல் 17 வயதுக்குட்பட்ட 402 சிறார்களைக் காப்பாற்றியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.