ஷா ஆலம், செப். 19 - மத்திய அரசு நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தர நிர்ணய முறையின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய மாநிலத்திலுள்ள அனைத்து 12 ஊராட்சி மன்றங்களின் அடைவு நிலையை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வரும்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட “சமிக்ஞை விளக்கு“ அடிப்படையிலான இந்த புதிய தர நிர்ணய முறை அனைத்து மாநிலங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் இந்த “சமிக்ஞை விளக்கு“ அடிப்படையிலான தர நிர்ணய முறையை நாங்கள் வரவேற்கிறோம். சிலாங்கூர் மாநிலத்தை பொறுத்தவரை நாங்கள் அனைத்து 12 ஊராட்சி மன்றங்களிலும் கே.பி.ஐ. எனப்படும் அடைவு நிலைக்கான குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறோம் என்று அவர் சொன்னார்.
இதன் பிறகு அனைத்து ஊராட்சி மன்றங்களின் செயல்முறைகளை நாங்கள் அணுக்கமாக கண்காணிப்போம். காரணம், இதில் மாநில அரசின் கௌரவம் அடங்கியுள்ளது என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சின் இந்த சமிக்ஞை விளக்கு அடிப்படையிலான தர நிர்ணய முறை ஊராட்சி மன்றங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தி இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.
மேலும், அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முறை மிகவும் எளிதானதாக உள்ளதால் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் பகுதியிலுள்ள ஊராட்சி மன்றங்களின் சேவையை கண்காணிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
நாட்டில், குறிப்பாக சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்களின் சேவைத் திறனை பொது மக்கள் கண்காணிக்க இந்த சமிக்ஞை விளக்கு முறை பெரிதும் உதவும். இதன் மூலம் அதிகாரிகள் தங்கள் பணிகளை செவ்வனே ஆற்றுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.


