ஷா ஆலம், செப் 18: கிள்ளானில் உள்ள  தெலுக் கோங் பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கூற்றை கிள்ளான் மாநகராட்சி மறுத்துள்ளது.

கிள்ளான் மாநகராட்சி அமலாக்கத் துறையுடன் இணைந்து உரிமத் துறையால் இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 18 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாக அதன் நிறுவன தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் கூறினார்.

உரிமம் இல்லாமல் செயல்படுதல் மற்றும் வடிகால், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு மொத்தம் 27 அபராதங்கள் வழங்கப்பட்டன என நோர்யவிசா மாவிஸ் கூறினார்.

"தெலுக் கோங் பகுதி அமைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதை எம்பிடிகே எப்போதும் கண்காணிக்கிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அப்பகுதியில் 274 உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் உள்ளன.

அவற்றில் 47 பிளாஸ்டிக் தொடர்பான தொழிற்சாலைகள் அடங்கும். அதில் மூன்று பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இறக்குமதி அனுமதி (AP) பெற்றுள்ளன. ," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தெலுக் கோங்கைச் சுற்றி அமலாக்கப் பணிகளை மேற்கொள்வதில் சுற்றுச்சூழல் துறை (DOE) மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) ஆகியவற்றிற்கு எம்பிடிகே ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.

"எம்பிடிகே தெலுக் கோங் பகுதியைக் கண்காணித்து ஆய்வு செய்யவில்லை என்று குடியிருப்பாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) கூறுவது முற்றிலும் உண்மையல்ல," என்று அவர் விளக்கினார்.