கிள்ளான், செப்.15- ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிக்கும் பணி அடுத்த ஆண்டு மே மாதம் முழுமையாக நிறைவடையும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
அரங்கம் இடிக்கப்படும் நிலையைப் பொறுத்து புதிய ஷா ஆலம் விளையாட்டு வளாகத்திற்கான கட்டுமானப் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
அரங்கை இடிக்கும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அது முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் என்று இங்குள்ள பாடாங் லாமான் செனியில் 2024 எஃப்.ஐ.டி. மலேசியா சிலாங்கூர் மினி விழாவைத் தொடக்கி வைத்த பிறகு அவர் சொன்னார்.
அரங்கின் இடிப்பு நடைமுறையின் செயலாக்கத்தைப் பொறுத்து நாங்கள் இப்போது கட்டுமானப் பணியைத் தொடங்கவும் முயற்சிக்கிறோம் என்று அவர் கூறினார்.
அரங்க இடிப்புப் பணிகளால் இடையூறு ஏற்பட்டது தொடர்பில் ஷா ஆலம் செக்சன் 13 பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று முகமது நஜ்வான் விளக்கினார்.
இந்த இடிப்புப் பணியை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் காற்றின் தரம் ஓரளவு பாதிக்கப்பட்டு தூசு பரவும் என்பதை மறுக்க முடியாது. ஆயினும் இதுவரை அதனை நன்றாக கையாண்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலம் அரங்கத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பலரது உணர்வுபூர்வமான கருத்துகளை நான் சமூக ஊடகங்களில் காண்கிறேன். எது எப்படி இருப்பினும், சிலாங்கூரில் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் மைதானத்தை தரம் உயர்த்துவதற்கும் அப்பணியை நாங்கள் தொடரத்தான் வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, மூன்று கட்டங்களை உள்ளடக்கிய ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானம் வரும் 2029ஆம் ஆண்டிற்குள் முழுமையாக தயாராகும் என்று எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் அறிவித்திருந்தது.


