SELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் நூறு இந்தியர்கள் உள்பட 300 பேருக்கு பிங்காஸ் திட்டத்தில் வாய்ப்பு

15 செப்டெம்பர் 2024, 5:10 AM
புக்கிட் மெலாவத்தி தொகுதியில் நூறு இந்தியர்கள் உள்பட 300 பேருக்கு பிங்காஸ் திட்டத்தில் வாய்ப்பு

ஷா ஆலம், செப் 15- புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச்

சேர்ந்த நூறு இந்தியர்கள் உள்பட 300 பேர் பிங்காஸ் எனப்படும்

சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்குரிய

வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

ஏழ்மை நிலையிலுள்ளவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தி விடும்

நோக்கில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக பி40 பிரிவைச்

சேர்ந்த அந்த 300 குடும்பத்தினரும் ஈராண்டு காலத்திற்கு மாதம் 300

வெள்ளியை உதவித் தொகையாகப் பெறுவர்.

இந்த பிங்காஸ் திட்டத்தில் இம்முறை இத்தொகுதியைச் சேர்ந்த

குறைந்தது 100 இந்தியக் குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படும்

நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதில் முன்னுரிமை

அளிக்கப்படும் என்று புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர்

தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

இந்த பிங்காஸ் திட்டம் இலக்கிடப்பட்டத் தரப்பினரைச் சென்றடைவதை

உறுதி செய்ய இதற்கான விண்ணப்பங்கள் கடுமையான பரிசீலனைக்கு

உட்படுத்தப்படும் என்பதோடு அனைத்து விண்ணப்பதாரர்கள் வீட்டிற்கும்

தாம் நேரில் சென்று அவர்களின் குடும்ப நிலையைத் ஆய்வு

செய்யவுள்ளதாக அவர் சொன்னார்.

மிக வறிய நிலையிலுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள் 15

பேருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு

வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களை உயர்த்தி விடும் ஏணிப்படியாக விளங்கக் கூடிய இந்த இந்த பிங்காஸ் திட்டத்தின்

பயனாளிகள் குறிப்பிட்ட அந்த ஈராண்டு காலத்தில் வேலை வாய்ப்பு

அல்லது வியாபாரம் வாயிலாக அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை

உயர்த்திக் கொள்வது அவசியமாகும் என்றார் அவர்.

இந்த உதவித் திட்டத்தில் இடம் பெற்றவர்களின் பொருளாதார

மாற்றங்களையும் நாங்கள் ஆய்வு செய்வோம். நாங்கள் ஏற்படுத்தித் தரும்

வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் அரசின் உதவிகளை

மட்டும் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பிங்காஸ் திட்டத்தில் வாய்ப்பு

வழங்கப்படாது என அவர் நினைவுறுத்தினார்.

இந்த பிங்காஸ் திட்ட உதவி அனைவருக்கும் கிடைக்கும் என்பதும் இந்த

நிதியை ஒரு முறை பெற்றவர்கள் தொடர்ந்து பெறுவதற்குரிய

வாய்ப்பினைப் பெறுவார்கள் என்பதும் ஒரு தவறான கருத்தாகும்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை

வழங்கும் நோக்கில் மிக வறிய நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே

இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு முறை மட்டுமே

அதாவது ஈராண்டுகளுக்கு மட்டுமே உதவி பெறுவதற்குரிய வாய்ப்பு

கிட்டும் என்றார் அவர்.

பிங்காஸ் நிதி பெற்ற பலர் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் வருமானத்தைப்

பெருக்கிக் கொள்வதில் எந்த முனைப்பும் காட்டாமல் இந்த உதவி

தங்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் எனக் கோருவது மிகவும்

வருத்தமளிப்பதாக உள்ளது என தீபன் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.