ஷா ஆலம், செப் 15- புத்ரா பிசினஸ் ஸ்கூல் (பி.பி.எஸ்.) ஏற்பாட்டில் கிள்ளான் அரச சிலாங்கூர் யாச்ட் கிளப்பில் நடைபெற்ற கிள்ளான் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் கலந்து கொண்டார்.
இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி மற்றும் பி.பி.எஸ். தலைவர் பேராசிரியர் டாக்டர் அஸ்மாவானி அப்துல் ரஹ்மான் சிறப்பு வருகை புரிந்த இந்த துப்புரவு இயக்கத்தில் பி.பி.எஸ். பள்ளியின் மாணவர்கள் உட்பட 150 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
ஆற்றின் கரைகள் மற்றும் நீர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த மூன்று மணி நேர துப்புரவு இயக்கத்தில் மொத்தம் 700 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக அரச முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது.
பி.பி.எஸ். வேந்தராக உள்ள மேன்மை தங்கிய ராஜா மூடா கிள்ளான் நதியை சுத்தப்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதோடு இத்தகைய இயக்கங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கும் என்று அவர் நம்புகிறார் என அப்பதிவு குறிப்பிட்டது .
இந்த திட்டமானது நதி மற்றும் இயற்கை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியின் தொடக்கமாகும் என்று அது கூறியது.
இதற்கிடையில், சமூகத்தின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்களை தனது தரப்பு எப்போதும் ஆதரிக்கிறது என்று நஜ்வான் எக்ஸ் பக்கத்தில் மூலம் தெரிவித்தார்.
கிள்ளான் ஆற்றின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல் சமூகத்தில், குறிப்பாக இளைஞர்களிடையே தன்னார்வ உணர்வைத் தூண்டும் இதுபோன்ற முயற்சிகளை மாநில அரசு மிகவும் வரவேற்கிறது என்று அவர் கூறினார்.


