ஷா ஆலம், செப் 13: எல்இடி விளக்குகளை நிறுவுவதுடன், கெபோங்கில் உள்ள தாமான் எஹ்சான் பொது மைதானத்தை மேம்படுத்த மொத்தம் RM1.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு செலாயாங் நகராண்மை கழக நிதியை முழுமையாக பயன்படுத்தியது என்று புக்கிட் லஞ்சன் மாநில சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் கூறினார்.
"தாமான் எஹ்சான் பொது மைதானத்தை மேம்படுத்தும் பணி ஜூலை 1 முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடைகள் ஏதும் இல்லை என்றால் இந்த திட்டம் டிசம்பர் 16 ஆம் தேதி முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
"இத்திட்டத்தில் கபின் கட்டுதல், உடற்பயிற்சி உபகரணங்கள், நாற்காலிகளை அதிகரித்தல், அறிவிப்பு பலகைகள், வலை வேலிகள் நிறுவுதல், கழிப்பறைகள், ஸ்டோர் மற்றும் எல்இடி விளக்குகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்" என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
வழங்கப்பட்ட உபகரணங்களை சேதப்படுத்தாமல் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஓய்வுநேர நடவடிக்கையில் ஈடுப் படுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று பெய் லிங் நம்புகிறார்.
"இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி.
"எதிர்காலத்தில் இந்த களம் மேம்படுத்தப்படும் போது, சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.


