(ஆர்.ராஜா)
ஷா ஆலம் செப். 9- மாநில அரசு அமல்படுத்தியுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டண உதவித் திட்டம் மிகவும் பயன்மிக்க ஒன்றாக விளங்குகிறது என்று பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட் ஹருண் அமினார் ரஷிட் கூறினார்.
வசதி குறைந்த மாணவர்களின் மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இந்த பள்ளி பேருந்து கட்டணமும் ஒன்றாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவது பெற்றோர்களின் அடிப்படை கடமையாக உள்ள அதே வேளையில் அவர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவது மிகவும் சவால் மிக்கதாக உள்ளது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் வாயிலாக பெற்றோர்கள் எங்களிடம் முன்வைக்கும் மனக்குறைகளில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் நிலவும் சிக்கல் முக்கியமானதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் நிலவும் சிக்கல் தவிர்த்து, அவர்களுக்கு பள்ளி உபகரணங்களை வாங்கித் தருவது மற்றும் டியூஷன் வாகுப்புகளை ஏற்பாடு செய்வது ஆகியவையும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு சிரமமான ஒன்றாக விளங்கிறது.
மாணவர்களுக்கான அடிப்படை தேவையாக விளங்கும் போக்குவரத்து வசதி, பள்ளி உபகரணங்கள் மற்றும் டியூஷன் வகுப்புகள் ஆகிய மூன்று தேவைகளையும் மாநில அரசு தயார் நிறைவேற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் அளவுக்கு கல்வி விஷயத்தில் அக்கறை காட்டும் வேறு மாநிலத்தையும் காண முடியாது எனக் கூறிய அவர், இந்த உதவித் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றார்.
மாநில அரசின் இத்தகைய உதவி திட்டங்கள் சமூகத்திற்கு சிறப்பான அனுகூலங்களைக் கொண்டு வரும் என்று கடந்த சனிக்கிழமை இங்குள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்துக் கட்டணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் சொன்னார்.


