ஷா ஆலம், செப். 9- சிலாங்கூர் மந்திரி புசார் கழக அறவாரியத்தின் (எம்.பி.ஐ.) பேரிடர் நிதிக்கான விண்ணப்பம் மற்றும் உதவித் தொகை விநியோக நடைமுறை எளிதாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளக் கார்டு நகல், போலீஸ் புகார் ஆகியவற்றோடு பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சித்தரிக்கும் புகைப்படங்கள் அல்லது காணொளியைச் சமர்ப்பித்தால் போதுமானது என்று எம்.பி.ஐ. அற வாரியத்தின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனா நோர் கூறினார்.
வழக்கமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருக்கும் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களை சந்திக்கும் போது குறைந்தது 100 வெள்ளியை அவர்களுக்கு வழங்குவதோடு எஞ்சிய உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக அவர்களிடமிருந்து விபரங்களை எம்.பி.ஐ. பெறும் என்று அவர் சொன்னார்.
எவ்வளவு விரைவாக ஆவணங்கள் கிடைக்கிறதோ அவ்வளவு விரைவாக உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினரும் கிராமத் தலைவரும் விரைவாகச் செயல்பட்டால் இரு வாரங்களில் உதவிகள் வழங்கப்படும் என்று மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் முறையை தரம் உயர்த்துவதற்கு மேலும் வாய்ப்புகள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கிராமத் தலைவர்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் அதில் அடங்கும் என்றார் அவர்.
ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் எந்த பிரச்சினையும் எழாவிட்டால் உதவித் தொகையை எம்.பி.ஐ. விரைந்து பகிர்ந்தளிக்கும். அரசாங்கம் தங்களை விரைவாக அணுகுகிறது என்று மக்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.


