கோம்பாக், செப். 9- சிலாங்கூர் மாநிலத்தில் பரம ஏழ்மைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் இலக்கு கடந்த ஜூலை மாதம் அடையப் பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் ஸக்காட் வாரியம், சமூக நல இலாகா மற்றும் இதர அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த இலக்கு அடையப் பட்டதாக அவர் சொன்னார்.
ஆக சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் நாம் இலக்கினை (சுழியம் பரம ஏழ்மை நிலை) அடைந்து விட்டோம். இருப்பினும், ஒவ்வொரு காலாண்டிலும் நமக்கு புதிய தரவுகள் வரும். அதில் சில மாற்றங்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஏனெனில், வேலை இழப்பு, நோய் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். ஆகவே, நாம் தொடர்ந்து தரவுகளை மறு ஆய்வு செய்து வருகிறோம் என்றார் அவர்.

டத்தாரான் செலாயாங்கில் நேற்று சுங்கை துவா தொகுதியின் முதலாவது ஏஹ்சான் மார்ட் பேரங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 861 பேராக இருந்த மிக வறிய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஜூலை மாதம் 245 பேராக குறைந்ததைத் தொடர்ந்து பரம ஏழ்மைக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க அரசு நோக்கம் கொண்டுள்ளதாக அமிருடின் முன்னதாகக் கூறியிருந்தார்.
பரம ஏழ்மை நிலையை 2025ஆம் ஆண்டில் முழுமையாக அகற்ற அரசாங்கம் 12வது மலேசியத் திட்டத்தில் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் அதனை இவ்வாண்டிற்குள் அடைவதற்கு ஏதுவாக அரசாங்கம் அந்த இலக்கை மறுநிர்ணயம் செய்திருந்தது.


