கோல லங்காட், செப். 9- இங்குள்ள சுங்கை ராசாவ் நீர் விநியோகத் திட்ட கட்டுமான பகுதியில் (முதல் கட்டம்) நேற்று மாலை கரை உடைந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் விரிவான விசாரணை நடத்தும்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தினால் நியமிக்கப்படும் புவிசார் தொழில்நுட்பத் துறையில் திறன் பெற்ற நிபுணர்களைக் கொண்டு இந்த விசாரணை நடத்தப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை விளக்கும் விரிவான அறிக்கை மூன்று மாத காலத்தில் வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.
விசாரணைக்கு வழி விடும் வகையிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதை தவிர்க்கும் நோக்கிலும் அப்பகுதியில கட்டுமானப் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அங்கு கட்டுமான நிபந்தனைகள் எதுவும் மீறப்படவில்லை என்பது நமது பார்வையில் தெரிகிறது. மேலும் கட்டுமானப் பகுதிக்கு அப்பால் உள்ள ஏரியிலிருந்து வலுவான நீரோட்டமும் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நீரின் அளவும் சமமானதாகவே காணப்பட்டது. மண் குவியல் இல்லை. அனைத்தும் திடீரென நிகழ்ந்துள்ளன. இது குறித்து நாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று அவர் சொன்னார்.
நீர் விநியோகத் திட்டப் கட்டுமானப் பகுதியில் உள்ள கட்டமைப்புகளுக்கு இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அந்த நிபுணர்கள் ஆய்வு செய்வர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் எங்களின் நீர் விநியோகத் திட்டத்தில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எங்களிடம் மாற்று வழி உள்ளது. ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அடுத்தாண்டிற்கான கூடுதல் நீர் தேவையை ஈடு செய்வதற்கான திட்டத்தை மாநில அரசு வரைந்து வருகிறது என்றார் அவர்.
நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்த இந்த கரை உடைப்புச் சம்பவத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து 169 ஊழியர்களும் உயிர்த்தப்பினர்.


