ஷா ஆலம், செப் 2: சுங்கை பிலேக் தொகுதியில் வசிப்பவர்கள் இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இலவச ஆலோசனை சேவையைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் சிஹாட் ஹப் திட்டத்தின் மூலம் இந்த நிகழ்வு மனநலப் பிரச்சனை உள்ளவர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் லுவி கியான் கியோங் கூறினார்.
இந்த நிகழ்வு செப்டம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாலாய் எம்பிகேகே சிப்பாங் ஜெயா, கம்போங் பாரு சிப்பாங் ஜெயா, சிப்பாங்கில் நடைபெறும் என்றார்.
"உங்களுக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தால், போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து எங்களுடன் இலவச ஆலோசனை அமர்வுக்கு பதிவு செய்யுங்கள்," என்று அவர் நேற்று இரவு மூகநூல் மூலம் தெரிவித்தார்.
முன்னதாக, 2020 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நான்கு ஆண்டுகளில் 10,459 மனநலப் பிரச்சனைகள் மாவட்ட சுகாதார மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப் பட்டதாக சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வின் போது பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
மேலும், 2020 ஆம் ஆண்டில் 1,858 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து 2021 (1,942), 2022 (2,065), 2023 (2,297) மற்றும் 2024 மார்ச் 31 வரை, 2,297 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிள்ளான் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மனநல நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதாவது ஒரு வருடத்திற்கு 500 நோயாளிகள் ஆவர். அதைத் தொடர்ந்து பெட்டாலிங்கில் 400 மற்றும் சிப்பாங்கில் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.


