ஷா ஆலம், ஜூன் 4- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (பி.கே.என்.எஸ்.) வீடு வாங்குவோர் கொள்முதல் மற்றும் சீரமைப்புக்கு கடன் பெறுவதை எளிதாக்க மாநில அரசின் அந்த துணை நிறுவனம் மேபேங்க் வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக கொள்முதல் செய்யும் வீட்டிற்கு 90 விழுக்காடு வரை கடன் பெறவும் மைடெக்கோ எனும் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகளுக்காக கூடுதலாக 30 விழுக்காடு அல்லது கூடுதல் பட்சம் 250,000 வெள்ளி பெறுவதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பி.கே.என்.எஸ். குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ முகமது அப்பாஸ் கூறினார்.
போதுமான அளவு நிதிக் கையிருப்பு இல்லாத காரணத்தால் புதிதாக வீடு வாங்குவோரில் பலர் தங்கள் வீடுகளை அழகுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
நடப்பு பொருளாதாரச் சூழலில் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதால் வீடுகளை சீரமைப்பு செய்வது கடினமானதாக உள்ளது. தாங்கள் விரும்பிய விதத்தில் அழகுப்படுத்தப்பட்ட வீடுகளை சொந்தமாக பெறுவதற்குரிய வாய்ப்பினை வீடு வாங்குவோருக்கு வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
அதே சமயம், வீடுகளின் கூரையில் சோலார் எனப்படும் சூரிய ஒளியீர்ப்பு தகடுகளைப் பொருத்தும் வாய்ப்பும் துணை நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
முன்னதாக அவர், மைடெக்கோ நிறுவனத்திற்கும் மேபேங்க் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டார்.
இதனிடையே, இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மைடெக்கோவுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை உள்பட 120 விழுக்காடு வரையிலான கடனுதவியை வீடு வாங்குவோர் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று மேபேங்க் குழுமத்தின் சமூக நிதிச் சேவைப் பிரிவுத் தலைமைச் செயல்முறை அதிகாரி சைட் அகமது தாவுபிக் கூறினார்.


