SELANGOR

ஹைட்ரோகிராபிக் மையத்தில் அத்துமீறி நுழைந்த நான்கு அந்நியப் பிரஜைகள் கைது

29 மே 2024, 8:40 AM
ஹைட்ரோகிராபிக் மையத்தில் அத்துமீறி நுழைந்த  நான்கு அந்நியப் பிரஜைகள் கைது

ஷா ஆலம், மே 29: கிள்ளான்,  புலாவ் இண்டாவில் உள்ள தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையத்தின் (பி.எச்.என்.) பிரதான வாயில் பகுதிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை   அத்துமீறி நுழைந்த சந்தேகத்தின் பேரில் நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இருபத்தோரு  முதல் 36 வயது வரையிலான அவர்கள்  அனைவரும் பி.எச்என். கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் சாலையில் சுற்றித் திரிந்த போது பணியில் இருந்த அரச மலேசிய கடற்படை உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த மே 26 ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் அம்மையத்தில் பணியில் இருந்த ஒரு அதிகாரியிடமிருந்து தங்களுக்கு புகார் வந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி  சா ஹூங் பூங் கூறினார்.

சந்தேக நபர்கள் அனைவரும் கட்டிடத்தின்  பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் சாலையில் சுற்றித் திரிந்து படம் எடுப்பது போல் நடித்து சந்தேகத்திற்கிடமான நிலையில் நடந்து கொண்டதை கண்ட  கடற்படை உறுப்பினர்கள் அவர்களை கைது செய்ததாக அவர் கூறினார்.

கடற்படை உறுப்பினர்களால்  தடுத்து வைக்கப்பட்ட அந்த நால்வரும் பின்னர் மேல் விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று  இன்று வெளியிட்ட  ஒரு அறிக்கையில்  அவர் தெரிவித்தார்.

கைதான சந்தேக நபர்கள் அனைவரும் இன்று வரை மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டு அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 447 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டனர் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.