SELANGOR

கே.கே.பி. இடைத் தேர்தல் பிரசாரத்தில் மாமன்னரின் படம்- ராமசாமி மீது மே 30ஆம் தேதி மீண்டும் குற்றச்சாட்டு

24 மே 2024, 9:09 AM
கே.கே.பி. இடைத் தேர்தல் பிரசாரத்தில் மாமன்னரின் படம்- ராமசாமி மீது மே 30ஆம் தேதி மீண்டும் குற்றச்சாட்டு

கோல குபு பாரு, மே 24- கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரத்தின்

போது மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான இப்ராஹிமின் படத்தை

காட்சிக்கு வைத்த நபருக்கு எதிராக வரும் மே 30ஆம் தேதி இங்குள்ள

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றச்சாட்டு கொண்டு

வரப்படவுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரான பி.ராமசாமி (வயது 66) இன்று நீதிமன்றத்தில்

ஆஜராகவில்லை என்பதால் இந்த விசாரணைக்கான புதிய தேதியை

நிர்ணயிக்கும் படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஸ்மா கேட்டுக்

கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டாக பொறுப்பேற்ற நீதிபதி சித்தி

ஃபாத்திமான தாலிப் வரும் மே 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட (ராமசாமி) நபரின் மறுஆய்வு மனுவை ஷா ஆலம்

உயர் நீதிமன்றம் மே 23ஆம் தேதி ஏற்றுக் கொண்டது என்பதை இந்த

நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்ட அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பும் தண்டனையும் ரத்து  செய்யப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் முன்னிலையில் இந்த வழக்கு வரும் மே 30ஆம்

தேதி நடைபெறும் என்று சித்தி ஃபாத்திமா குறிப்பிட்டார்.

முன்னதாக, ராமசாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.பவித்ரா

தனது கட்சிக்காரர் எங்கிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை

என்று நீதிமன்றத்தில் கூறினார்.

மறுஆய்வு மனு மீது உயர் நீதிமன்றம் நேற்று முடிவெடுக்கும் போது

எனது கட்சிக்காரர் காஜாங் சிறையில் இருந்தார் என அவர் தெரிவித்தார்.

ராமசாமியின் மறுஆய்வு மனுவை நேற்று ஏற்றுக் கொண்ட நீதித்துறை

ஆணையர் வெண்டி ஊய் சூ கீ, கோல குபு பாரு மாஜிஸ்திரேட்

நீதிமன்றத்தில் தனக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்ட போது

அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை ரத்து செய்வதாக தனது தீர்ப்பில்

கூறினார்.

கடந்த மே 6ஆம் தேதி வழக்கு கோல குபு பாரு மாஜிஸ்திரேட்

நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ராமசாமி குற்றத்தை ஒப்புக்

கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு மாதச் சிறையும் 3,000 வெள்ளி

அபராதமும், அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் 10

மாதச் சிறையும் விதிக்கப்பட்டது.

கடந்த மே 4ஆம்தேதி மாலை 3.40 மணியளவில் தாமான் புக்கிட் பூங்கா

பகுதியில் தனது நான்கு சக்கர இயக்க வாகனத்தில் பக்கத்தான்

ஹராப்பான் பேனருடன் பேரரசரின் படத்தையும் காட்சிக்கு வைத்ததாக

ராமசாமிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.