உலு சிலாங்கூர், மே 13- கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோல குபு பாரு
தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றுமை அரசின்
வேட்பாளரான பாங் சோக் தாவ் இம்மாவட்டத்தை மேம்படுத்துவதற்கான
தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவார்.
அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங்
அளப்ரியா சேவைகளை பாங் சோக் தாவ் தொடர்வார் எனத் தாம்
நம்புவதாகச் சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
அனைத்து மக்களுக்கும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி உள்பட
கோல குபு பாரு தொகுதியிலுள்ள வேட்பாளர்களுக்கும் சிறப்பான
சேவையை பாங் வழங்க முடியும் என நான் நம்புகிறேன் என்று அவர்
குறிப்பிட்டார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஆற்றிய பணிகளை பாங் தொடரும்
அதேவேளையில் சில பலவீனங்களைக் களைந்து சேவைத் தரத்தை
அவர் மேம்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
கோல குபு பாரு தொகுதியில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் பெற்ற
வெற்றியை தொடர்வதற்கும் சேவைத் தரம் உயர்த்தப்படுவது
முக்கியமாகும். அதோடு மட்டுமின்றி அடுத்த பொதுத் தேர்தலில் உலு
சிலாங்கூர் தொகுதியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் மீண்டும்
கைப்பற்றுவதற்கும் இது உந்து சக்தியாக விளங்கும் என அவர்
தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோல குபு பாரு இடைத் தேர்தலில் பாங்
3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து
போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருள் அஸ்ஹாரி சாவுட் 10,131 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளரான ங்காவ் கீ ஷின் 188 வாக்குகளையும் பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியின் வேட்பாளர் ஹபிஷா ஜைனுடின் 152 வாக்குகளையும் பெற்றனர்.


