கோல குபு பாரு, ஏப் 16- சிலாங்கூர் பக்கத்தான் கூட்டணி அரசு
மாநிலத்திலுள்ள இந்தியர்களை ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்ப்பள்ளிகள்,
ஆலயங்கள் உள்பட இந்திய சமூகத்திற்குப் பல்வேறு உதவிகளை மாநில
அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் சொன்னார்.
எனது சட்டமன்றத் தொகுதியான சுங்கை துவா உள்பட சிலாங்கூரில்
உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் மிகப்பெரிய அளவில் உதவி வருகிறோம்.
2008ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை மாநிலத்திலுள்ள
தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகப் பெரிய நிதியை வழங்கி வந்துள்ளோம்.
இது தவிர ஆலயங்கள், அரசு சாரா அமைப்புகள், இந்திய இளம் தொழில்
முனைவோர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் உதவிக் கரம் நீட்டி
வந்துள்ளோம்.
சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களை ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
இனி வரும் காலங்களிலும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்குத்
தொடர்ந்து உதவிகளை வழங்குவோம் என அவர் உறுதிப்படக்
கூறினார்.
இந்தியர்கள் அதிகம் வாழும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் தாம்
பல முறை வெற்றி பெற்று வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்,
இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது
தொகுதியிலுள்ள பத்துமலைத் திருத்தலத்தில் ஒவ்வோராண்டும் தைப்பூச
விழாவில் கலந்து கொள்வதாகக் கூறினார்.
கோல குபு பாரு, ராசா, கம்போங் சுவாங் சமூக மண்டபத்தில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து
கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்வில் கலந்து கொண்ட 100
பேருக்கு எம்.பி.ஐ.எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின்
ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், உலு சிலாங்கூர்
நகராண்மைக் கழக உறுப்பினர்களான ப.புவனேஸ்வரன், எஸ்.சின்னையா,
எம், திலகேஸ்வரி, ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள்
உள்ளிட்டோர் சிறப்பு வருகை புரிந்தனர்.


