ஷா ஆலம், ஏப் 2- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் 300
மோட்டார் சைக்கிளோட்டிகள் இன்று இலவசப் பெட்ரோலைப் பெற்றனர்.
இங்கு செக்சன் 7, பெட்ரோனாஸ் நிலையத்தில் இந்த இலவசப் பெட்ரோல்
வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
உணவு விநியோகிப்பாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சாலை
பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இலவசப் பெட்ரோலைப் பெற்றதாக
மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் இஞ்சினியர் செரேமி தர்மான்
கூறினார்.
ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள சமூகத்திற்கு உதவுவது மற்றும்
சமூகத்துடனான நட்புறவை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களின்
அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
வட்டார மக்ளுக்கு இத்தகைய சமூக நலத் திட்டங்களை
அமல்படுத்துவதன் மூலம் ஷா ஆலம் மாநகர் மக்களிடையே சமூக
கடப்பாடு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என்று அவர்
தெரிவித்தார்.
இந்த இலவச பெட்ரோல் திட்டத்தை மாநகரின் வட மற்றும் தென்
பகுதிகளுக்கும் விரிவுபடுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும்
சொன்னார்.
இதனிடையே, மோட்டார் சைக்கிளோட்டிகளின் செலவினத்தைக்
குறைக்கும் நோக்கிலான இந்த திட்டத்தை அமல் செய்த ஷா ஆலம்
மாநகர் மன்றத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இலவசப்
பெட்ரோலைப் பெற்றவர்களில் ஒருவரான ஹிஷமுடின் ஹசான் (வயது
39) கூறினார்.
கிரேப் சேவை வழங்குநரான நான் தினமும் மோட்டார் சைக்கிளில்
அங்கும் இங்கும் செல்ல வேண்டியுள்ளது. நாளொன்றுக்கு 6.00 வெள்ளி வரை பெட்ரோலுக்கு செலவிடுகிறேன். இந்த இலவசப் பெட்ரோல்
திட்டத்தின் மூலம் செலவினத்தைக் குறைக்க முடிந்தது என்றார் அவர்.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இந்த இலவச பெட்ரோல் திட்டத்தை
பெரிதும் வரவேற்றுப் பேசிய ரஹிமா சிட்ஹாமிட் (வயது 45) என்ற மாது,
இத்திட்டத்தை மாநகர் மன்றம் தொடர்நது நடத்தும் எனத் தாம்
எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.


