பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26 - சிலாங்கூர் எஃப்சி கால்பந்துக் குழுவுக்கான புதிய உதவிப் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தலைமைப் பயிற்சியாளர் நிட்ஸாம் ஜாமீல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று சிலாங்கூர் எஃப்.சி.யின் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோ ஜோஹான் கமால் தெரிவித்தார்.
நாங்கள் இரண்டு அல்லது மூன்று புதிய உதவி பயிற்சியாளர்களைப் பணியமர்த்தவுள்ளோம். நிட்ஸாம் தற்போது வேட்பாளர்களின் விபரக்குறிப்புகளை மதிப்பீடு செய்து வருகிறார். மேலும் குழுவில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யும் பொறுப்பை நாங்கள் அவரிடமே விட்டுவிட்டோம் என்று அவர் சொன்னார்.
பட்டியலில் பல வேட்பாளர்கள் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து ஒரு உதவி பயிற்சியாளரை தலைமைப் பயிற்றுநர் அழைத்து வருவதற்கான சாத்தியம் உள்ளது. அவர்களில் ஒருவர் நிட்ஸாம் பயிற்சியாளராக இருந்த காலத்தில் மலேசியாவில் விளையாடிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராவார் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் எஃப்.சி. யின் நோன்பு துறப்பு நிகழ்வில் அவர் கூறினார்.
உதவி பயிற்சியாளருக்கான மிக முக்கியமான அளவுகோல் விளையாட்டைப் பற்றிய பரந்த அறிவு, சிலாங்கூர் எஃப் சி.யின் திசையை அறிந்திப்பது, எங்கள் இலக்குகளைப் பற்றிய தெளிவான புரிதல் மற்றும் ஆசிய கால்பந்தைப் பற்றிய ஓரளவு ஞானம் ஆகியவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.


