ஷா ஆலம், மார்ச் 8 - மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி
வழங்க வகை செய்யும் ‘பந்துவான் சேஹாட் சிலாங்கூர்‘ (பி.எஸ்.எஸ்.)
திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு 50 லட்சம் வெள்ளியை மாநில அரசு
ஒதுக்கீடு செய்துள்ளது.
வசதி குறைந்தவர்களுக்கு 5,000 வெள்ளி வரை மருத்துவ சிகிச்சைக்கான
நிதியை வழங்க வகை செய்யும் இந்த திட்டத்தின் கீழ் அரசாங்க
மருத்துவமனைகளில் டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு, கண்
புரை, சிறிய அறுவை சிகிச்சை, செயற்கை கால் பொருத்துதல் மற்றும்
மருத்துவ உபகரணங்களை பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில், தேவைப்படும் தரப்பினருக்கு மருத்துவ
சிகிச்சைக்கான உதவிகளை வழங்குவதற்குரிய வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்னளது என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் 5,000 வெள்ளி வரை மருத்துவ உதவி பெற உதவும் இந்த
திட்டம் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது
என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
சிலாங்கூர் மக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளை
மேற்கொள்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் சாரிங் திட்டத்தை மாநில அரசு
அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்
கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது. வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துவதன் வாயிலாக மாநிலத்தின் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகளும் முன்னெடுப்புகளும்
அவசியமானவையாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.
கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பி.எஸ்.எஸ். திட்டத்தை
இவ்வாண்டிலும் 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு
தொடரும் என்று கடந்தாண்டு 2024 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்
செய்த போது அமிருடின் குறிப்பிட்டிருந்தார்.




