ஷா ஆலம், மார்ச் 7: எதிர்வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் 200,000க்கும் அதிகமான சிலாங்கூர் கூ வீடுகளை உருவாக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, மொத்தம் 40,951 வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 17,225 வீடுகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. இதனால் அதிகமான மக்கள் வசதியான வீடுகளைப் பெற முடியும் என போர்ஹான் அமன் ஷா கூறினார்.
"தற்போது 17,225 வீடுகள் கட்டுமானத்தில் உள்ள நிலையில் எதிர்வரும் குறுகியக் காலத்தில் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 40,951 வீடுகளை எட்ட இலக்கு வைத்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம், மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவது மாநிலத்தின் எண்ணமாகும் என தெரிவித்தார்.
"வீட்டு மேம்பாட்டாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வசதியாக அமையும் ரூமா சிலாங்கூர் கூ மற்றும் ரூமா இடமான் திட்டம் எங்களிடம் உள்ளது," என்று நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் நூருல் சயாஸ்வானி நோயின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
"மேலும், 35 மற்றும் அதற்கு குறைவான வயதுடைய இளைஞர்களிடமிருந்து ரூமா சிலாங்கூர் கூ திட்டத்திற்காக 65,067 விண்ணப்பங்களும் மற்றும் ஸ்மார்ட் வாடகைத் திட்டத்திற்கு 769 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
"வீட்டு மேம்பாட்டாளர்களால் வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்குவதை மாநில அரசு எப்போதும் வரவேற்கிறது. இதுவரை, 347 வீடுகள் அடங்கிய இரண்டு திட்டங்களுக்கு மாநில அரசு கூட்டத்தில் (எம்எம்கேஎன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் வசதியான மற்றும் பாதுகாப்பான வீடு இருப்பதை உறுதி செய்வதற்காக மலிவு விலை வீட்டுக் கொள்கை செயல்படுத்தப்பட்டது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.




