ஷா ஆலம், மார்ச் 6: சிலாங்கூரின் ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) என்னும் முதியோருக்கான உதவி திட்ட வழங்குதல்கள் மின் வவுச்சர்கள் மூலம் எதிர்வரும் ஏப்ரல் முதல் செலுத்தப்படும் என்று சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் அல்லது ஒருங்கிணைப்பாளரின் அலுவலகத்தில் கோரப்பட வேண்டிய பழைய முறையுடன் ஒப்பிடும்போது பெறுநர்கள் தங்கள் உரிமைகளை பெறுவதை எளிதாக்குவது இம்முறையின் நோக்கமாகும் என அன்ஃபால் சாரி கூறினார்.
"மாநில அரசு தற்போது டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒருங்கிணைப்பில் உள்ளது. ஏப்ரல் முதல் பதிவு மற்றும் சரிபார்ப்பு செயல்முறையை நாங்கள் தொடங்குவோம், அதே நேரத்தில் மின் வவுச்சர் முறையின் மூலம் உதவியை வழங்குவோம்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரனின் துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
எதிர்கட்சி தொகுதியில் உதவி பெறுபவர்களுக்கு விரைவில் வவுச்சர்களை விநியோகம் செய்யுமாறு யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூரிடம் (யாவாஸ்) அவரது தரப்பு கேட்டுக் கொள்ளும் என்றும் அன்ஃபால் மேலும் கூறினார்.
"எதிர்க்கட்சி பகுதிகளில் வவுச்சர்கள் விநியோகம் ஒருங்கிணைப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2024, இத்திட்டத்தை தொடர RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நபரும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க RM200 பெறுகிறார்கள் என்றார்.




