ஷா ஆலம், மார்ச் 6 - இளைஞர்கள் நேரத்தை பயனுள்ள வழிகளில்
செலவிடுவதை உறுதி செய்வதற்கும் அவர்கள் மத்தியில் ஒற்றுமையை
வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக சிலாங்கூர் அரசினால் உருவாக்கப்பட்ட
2020 சிலாங்கூர் இளைஞர் கொள்கை (டி.பி.எஸ்.) ராக்கான் மூடா
திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
தலைமைத்துவம், அரசியல் கல்வி, ராக்கான் டேமோகிராசி, ராக்கான்
மாஹிர் மற்றும் ராக்கான் பூமி ஆகியவற்றோடு சுற்றுச்சூழல் சமநிலை
ஆகியவற்றையும் இந்த திட்டம் உள்ளடக்கியிருக்கும் என்று இளைஞர்
மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
பதினைந்து முதல் 30 வயது வரையிலான இளையோர் பயனடைவதற்கு
ஏதுவாக பத்து வாழ்க்கை முறைகளை உள்ளடக்கிய இத்திட்டங்களை
சிலாங்கூர் இளைஞர் இயக்கம் மேற்கொள்ளும் என்று நஜ்வான் ஹலிமி
தெரிவித்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராக்கான் மூடா திட்டம் மக்கள்
மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த திட்டத்தை சிலாங்கூரில்
பிரபலப்படுத்துவதற்கு ஏதுவாக 2020 டி.பி.எஸ்.சை இலக்காக கொண்ட
பகுதிகளில் சிலாங்கூர் இளைஞர் இயக்கத் திட்டங்களை அமல்படுத்தலாம்
என்றார் அவர்.
மலேசியா மடாணி மற்றும் கித்தா சிலாங்கூர் கோட்பாடுகளை
ஒருங்ணைப்பதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றங்கள்
மற்றும் மாநில அரசு துறைகளை ஒன்றுபடுத்த முடியும் என்று மாநில
சட்டமன்றத்தில் அவர சொன்னார்.
சிலாங்கூர் இளைஞர் கொள்கை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம்
தேதி மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இளைஞர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களின் இலக்கை நிர்ணயிக்கக் கூடிய வழிகாட்டியாக இந்த கொள்கை விளங்குகிறது.




