SELANGOR

கழிவை எரிசக்தியாக மாற்றும் ஆலைத் திட்டம் சுற்றுச் சூழல் துறையின் ஆய்வில் உள்ளது

6 மார்ச் 2024, 2:31 AM
கழிவை எரிசக்தியாக மாற்றும் ஆலைத் திட்டம் சுற்றுச் சூழல் துறையின் ஆய்வில் உள்ளது

ஷா ஆலம், மார்ச் 6 - சுல்தான் இட்ரிஸ் ஷா பசுமை எரிசக்தி பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கழிவை எரிசக்தியாக மாற்றும்  (டபள்யூ.டி.இ.) ஆலை இன்னும் சுற்றுச்சூழல் துறையின்  மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளது.

மதிப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் விளைவு மீதான மதிப்பீடு (இ.ஐ.ஏ.) மற்றும் சமூக தாக்க மதிப்பீடு (எஸ்.ஐ.ஏ.) ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என்று  ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்  கூறினார்.

பத்து அரங்கில் உள்ள கழிவு-எரிசக்தியின் ஆலையின் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பொறுப்பான தரப்பினரால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்துலக  தரத்திற்கு ஏற்ப கவனமாக மேற்கொள்ளப்படுகிறது  என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அதே சமயம், அந்த டபள்யூ.டி.இ. திட்டத்தை வெறும் ஆலையாக மட்டுமின்றி  மாநில பசுமை ஆற்றல் பூங்காவாகவும் மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சுயி லிம் தெரிவித்தார்.

மறுசுழற்சி மையம், சோலார் பண்ணை, பசுமை மற்றும் நிலையான எரிசக்தி பற்றிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய ஆற்றல் மாற்ற சாலை வரைபடத்திற்கு ஏற்ப பொது பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றையும் இத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுல்தான் இட்ரிஸ் ஷா பசுமை பூங்கா திட்டத்தின் நான்கு கட்ட வளர்ச்சிக்கு 450

கோடி வெள்ளி செலவாகும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2024 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும் போது  தெரிவித்தார்.

கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் இத்திட்டம்  ஒரு நாளைக்கு 2,400 டன் குப்பைகளை எரித்து 130.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.