SELANGOR

சிலாங்கூரில் நீர் ஆதாரங்களைக் கண்காணிக்க 3 கோடி வெள்ளியை லுவாஸ் செலவிட்டது

5 மார்ச் 2024, 8:41 AM
சிலாங்கூரில் நீர் ஆதாரங்களைக் கண்காணிக்க 3 கோடி வெள்ளியை லுவாஸ் செலவிட்டது

ஷா ஆலம், மார்ச் 5 - மாநிலத்திலுள்ள கச்சா நீர் வளங்கள் உள்ள

பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணிகளை மேற்கொள்ள

சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) கடந்த 2018ஆம் ஆண்டு

முதல் 3 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

டெலிமெட்ரி நிலையங்களை அமைப்பது, கண்காணிப்பு சாதனங்களை

வாங்குவது, நீர் வளப் பகுதிகளில் அடிப்படை பராமரிப்பு பணிகளை

மேற்கொள்வது ஆகிய நோக்கங்களுக்காக இந்த தொகை

செலவிடப்பட்டதாக அடிப்படை வசதிகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்

இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த வாரியத்தின் செலவினம் சில ஆண்டுகளில் அபரிமித அதிகரிப்பைக்

கண்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் அதன் செலவினம் 360,000

வெள்ளியாக இருந்த வேளையில் 2021ஆம் ஆண்டு அந்த தொகை 88

லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியாக உயர்வு கண்டது என்றார் அவர்.

‘ஸ்குவாட் பந்தாஸ் லுவாஸ்‘ எனப்படும் லுவாஸ் விரைவு நடவடிக்கை

குழுவின் உருவாக்கத்திற்காக இந்த கூடுதல் தொகை செலவிடப்பட்டது.

பெஸ்தாரி ஜெயாவில் குளத்து நீர் இறைப்பு நடவடிக்கைகள் மற்றும்

சிலாங்கூரிலுள்ள உள்ள வடிநிலப்பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பை

மேற்கொள்வதற்கு இந்த குழு அமைக்கப்பட்டது என்றார் அவர்.

சட்டமன்றத்தில் இன்று மாநிலத்தின் நீர் வளங்கள் தொடர்பில் தாமான்

மேடான் தொகுதி உறுப்பினர் டாக்டர் அலிஃப் பகாருடின் எழுப்பிய

கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில், இம்முறை ஏற்படக்கூடிய எல் நினோ பருவநிலை

மாற்ற காலத்தின் போது சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர்

மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்குப் போதுமான நீர் கையிருப்பு

உள்ளது என இஷாம் தெரிவித்தார்.

சுங்கை சிலாங்கூர், சுங்கை திங்கி, செமினி மற்றும் தாசேக் சுபாங் ஆகிய

நான்கு நீர்த்தேக்கங்களில் கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவரப்படி 100

விழுக்காடு நீர் கொள்ளளவு இருந்ததாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.