ஷா ஆலம், மார்ச் 4 - சிலாங்கூரில் விவகாரத்துகளின் எண்ணிக்கை
அதிகரிப்பதற்கு வருமானத்தைக் காட்டிலும் வாழ்க்கைச் செலவினம்
அதிகமாக இருப்பது முக்கிய காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
வருமானம் போதாத காரணத்தால் மாநில மக்கள் பகுதி நேர வேலையைத்
தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தினருடன் அதிக
நேரத்தைச் செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டு குடும்ப உறவில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி ங்கா கூறினார்.
சிலாங்கூரில் குடியேறும் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரின்
எண்ணிக்கை அதிகரிப்பும் இந்த குடும்பவியல் பிரச்சனையுடன்
தொடர்புடையதாக உள்ளதாக கூறிய அவர், இதற்குத் தீர்வு காணும்
பொறுப்பு சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஷரியா நீதிமன்றங்கள் வசம்
உள்ளன என்றார்.
சிலாங்கூர் ஷரியா நீதித்துறை மற்றும் சமூக ஊடகங்கள் உள்பட
பல்வேறு துறைகளின் ஏற்பாட்டில் நடத்தப்படும் சட்ட கல்வித் திட்டமும்
மண முறிவு பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளன என அவர்
சொன்னார்.
இந்த கல்வியின் காரணமாக மக்கள் திருமண உறவில் தங்களுக்கு உள்ள
உரிமைகளை அறிந்து கொள்கின்றனர் என்று மாநில சட்டமன்றத்தில்
இன்று கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.
மாநிலத்தின் துரித வளர்ச்சியும் குடும்ப உறவில் விரிசல்கள்
ஏற்படுவதற்குக் காரணமாக விளங்குகிறது என்றும் அவர் சொன்னார்.




