ஷா ஆலம், பிப் 21: இவ்வார இறுதியில் அம்பாங் ஜெயாவில் உள்ள பண்டான் இண்டாவில் உள்ள பொது வீட்டமைப்பில் (பிபிஆர்) ரெவாங் திட்டத்தை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டு பகல்-ஓர் இரவு நடத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு சமூகத்திற்கான ரெவாங் திட்டத்தில் மக்களுக்காக மாநிலம் வழங்கிய திட்டங்களை விளம்பரப்படுத்துவதுடன், விளையாட்டு நடவடிக்கைகளும் இடம்பெறும் என்று கலாச்சாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா தெரிவித்தார்.
"அதே நேரத்தில், மக்களுடன் நெருக்கமாகவும் உள்ளூர் பிரச்சனைகளைக் கேட்கவும் இது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது,`` என்றார்.
"அவர்களின் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நானும் பிபிஆரில் இரவைக் கழிப்பேன். மேலும், வாய்ப்பிருந்தால் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் குடியிருப்பாளர்களைச் சந்திக்க களத்தில் இறங்குவார்" என்று அவர் கூறினார்.
இன்று பேராக் ஜூபிலி ஹால் ஆடிட்டோரியத்தில் சிலாங்கூர் மாநில விலைக்கட்டுப்பாட்டு சொத்துரிமை பொறிமுறைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த மொத்தம் RM500,000 ஒதுக்கப்பட்டதாகப் போர்ஹான் கூறினார்.
"ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட பகுதியைப் பொறுத்து சுமார் RM70,000 முதல் RM100,000 வரை செலவாகும். இதற்குப் பிறகு, நாங்கள் செலாயாங், சுபாங் ஜெயா மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்வோம், அவை பின்னர் பட்டியலிடப்படும்," என்று அவர் கூறினார்.
மேலும், நல்ல வரவேற்பைப் பெற்றால், சிலாங்கூரில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் உள்ளடக்கிய வருடாந்திர நிகழ்வாக இத்திட்டம் மாறும் என்று அவர் விளக்கினார்.




