SELANGOR

மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம் சாப்டா மேம்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையும்- மந்திரி புசார் நம்பிக்கை

19 பிப்ரவரி 2024, 6:43 AM
மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம் சாப்டா மேம்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையும்- மந்திரி புசார் நம்பிக்கை

ஷா ஆலம், பிப் 19- தற்போது நிர்மாணிப்பில் உள்ள மேற்குக் கரை

விரைவுச்சாலைத் திட்டம் (டபள்யூ.சி.இ.) முற்றுப் பெற்றதும் சாப்டா

எனப்படும் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதியின் மேம்பாட்டிற்கு மேலும்

தூண்டுகோலாக அமையும் என்பதோடு கிள்ளான் பள்ளத்தாக்கு

மக்களுக்கும் சிறப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும்.

இந்த விரைச்சாலைத் திட்டம் சாப்டா திட்டத்திற்குச் சாதகமான

அனுகூலங்களைக் கொண்டு வரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ

அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த விரைச்சாலைத் திட்டம்

சராசரி 88.7 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. இது சாப்டா திட்டம் மீது

சாதகமான பொருளாதார மற்றும் சமூகவியல் விளைவுகளை ஏற்படுத்தும்

என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நிர்மாணிப்பில் இருந்து வரும் அந்த விரைவுச்சாலையின்

நான்கு பிரிவுகளின் கட்டுமானப் பணிகளை 2024 மார்ச் மாதம் 31ஆம்

தேதியுடன் முடிவுக்கு வரும் நிதியாண்டுக்குள் பூர்த்தி செய்ய தாங்கள்

திட்டமிட்டுள்ளதாக டபள்யூ.சி.இ. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின்

தலைமைச் செயல்முறை அதிகாரி லிண்டன் அல்பிரட் ஃபீலிக்ஸ்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கூறியிருந்தார்.

அந்த விரைவுச் சாலையின் 1,2,6 மற்றும் 11ஆம் பிரிவுகள் கிள்ளான்

பள்ளத்தாக்கிலுள்ள பிரதான நெடுஞ்சாலைகளான தென்கிள்ளான்

விரைவுச்சாலை, ஷா ஆலம் விரைவுச்சாலை (கெசாஸ்), கோலாலம்பூர்-

கோல சிலாங்கூர் விரைவுச்சாலை (லத்தார்), வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை

(பிளஸ்) ஆகியவற்றை இணைக்கிறது.

மற்றப் பிரிவுகளான 3,4 மற்றும் 7 ஆகியவை 2025 நிதியாண்டிற்குள்

முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாநிலத்தின் உணவு பாதுகாப்பில் சாப்டா முக்கிய

பங்கினை ஆற்றும் எனக் கூறிய அமிருடின், இங்கு 190 கோடி வெள்ளி

மதிப்பிலான முதலீடுகளும் அதன் மூலம் உள்ளுர் மக்களுக்கு 3,600

வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும் என்றார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த

சாப்டா திட்டம், விவசாயத் திட்டங்களுக்கு மேலும் ஆதரவளிப்பதோடு

நீலப் பொருளாதாரம் எனப்படும் கடல் சார்ந்த பொருளாதார

நடவடிக்கைகளுக்கும் புத்துயிரளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.