ஷா ஆலம், பிப் 16 - சிஜாங்காங் சட்டமன்றத் தொகுதியில் நாளை நடைபெறும் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை பந்திங், பெர்சியாரான் ரிம்பாயு, ஜாலான் ரிம்பாயு 3, தி ஆர்ச் ரிம்பாயுவில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த மருத்துவப் பரிசோதனையில் தொற்றா நோய்கள் (இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம்) மற்றும் புற்றுநோய் (பெருங்குடல், புரோஸ்டேட், கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்) தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த இயக்கத்தில் கண் தொடர்பான சோதனைகளோடு பல், காது மற்றும் பிஸியோதெராபி சம்பந்தப்பட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் செலங்கா செயலியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்ட அவர், அந்த செயலியில் உள்ள பாரங்களில் பூர்த்தி செய்யப்படும் விபரங்களின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த பதிவினை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவோர் 1800 226 600 என்ற ஹாட்லைன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
இவ்வாண்டிற்கான சிலாங்கூர் சாரிங் மருத்துவப் பரிசோதனை இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று ஜமாலியா முன்னதாகக் கூறியிருந்தார்.
இலவசப் பரிசோதனைத் திட்டத்தை தொடர்வதற்காக மாநில அரசு 32 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷா 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.




