சைபர்ஜெயா, பிப் 16 - இவ்வாண்டில் 11 லட்சம் வெளிநாட்டுச்
சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக ‘அற்புத சிலாங்கூர், என்னை எங்கும்
அழைத்துச் செல்லுங்கள்‘ என்ற உலகலாவிய சுற்றுலா ஊக்குவிப்புத்
திட்டத்தை டூரிசம் சிலாங்கூர் தொடரவிருக்கிறது.
சிலாங்கூரில் உள்ள பிரசித்திப் பெற்ற சுற்றுலா மையங்களை
பிரபலப்படுத்தும் நோக்கிலான இந்த இயக்கம் ஜெர்மனி, தென் கொரியா,
இந்தியா, லாவோஸ், சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில்
மேற்கொள்ளப்படும் என்று டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை
அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.
சியோல் அனைத்துலக சுற்றுலா கண்காட்சி 2024, லாவோசில் நடைபெறும்
ஆசியான் சுற்றுலா ஆய்வரங்கு, மேடானில் நடைபெறும் மலேசிய
சுகாதார பராமரிப்பு கண்காட்சி மற்றும் சிங்கப்பூர் க்ருஸ் ஆசியா 2024
ஆகிய நிகழ்வுகளிலும் டூரிசம் சிலாங்கூர் பங்கேற்கும் என்று அவர்
தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தை அனைத்துலக நிலையில் பிரபலப்படுத்தும்
நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பல கவர்ச்சிகரமான
சற்றுலா மையங்களை மாநிலம் கொண்டுள்ளதால் பெரும்
எண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை நாம் ஈர்க்க
முடியும் என்றார் அவர்.
இந்த இயக்கத்தின் போது சிலாங்கூர் மாநில சுற்றுலாத் துறையை
விளம்பரப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பரஸ்பர
ஊக்குவிப்புத் திட்டங்களை மேற்கொள்ளும் அதேவேளையில் புரிந்துணர்வு
ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவுள்ளோம் என சிலாங்கூர் கினியிடம் அவர்
தெரிவித்தார்.
முன்னதாக ஊடகவியலாளர்களுக்காக இயற்கை அழகை கண்டறியும்
மற்றும் உணவு ஊக்குவிப்புத் திட்டத்தை டூரிசம் சிலாங்கூர் ஏற்பாடு
செய்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் மலேசிய விவசாய கண்காட்சி
பூங்காவில் (மேப்ஸ்) விளக்கொளி விழா, தாமான் கூச்சிங், சைபர் ஜெயா,
ராஜா ஹாஜி ஃபி சபில்லா பள்ளிவாசல் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற
இடங்களுக்கு ஊடகவியலாளரகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.




