ஷா ஆலம், பிப் 8 - எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார்
கழகத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாகச் சைபுல்யாஸான்
எம். யூசுப் நியமிக்கப்படுவதாக அக்கழகம் அறிவித்துள்ளது. அவரது
நியமனம் இன்று தொடங்கி அமலுக்கு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் எம்.பி.ஐ. தலைமைச் செயல்முறை
அதிகாரியாகப் பதவி வகித்த நோரித்தா முகமது சீடேக்கிற்குப் பதிலாக
சைபுல்யஸான் நியமிக்கப்படுவதாக எம்.பி.ஐ. இன்று வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் கூறியது.
தனது பணியின் போது காட்டிய முழு ஈடுபாடு, தியாகம் மற்றும்
அர்ப்பணிப்புக்காக நோரித்தாவுக்கு எம்.பி.ஐ. நிர்வாக வாரியம், நிறுவன
நிர்வாகக் குழு மற்றும் ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த வாரியம் தெரிவித்தது.
புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியைத் தாங்கள் வரவேற்பதோடு
நாணயம் மற்றும் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஆற்றிய
அனுபவத்தின் வாயிலாக இந்த நிறுவனத்தை அவர் மேலும் உயரிய
நிலைக்குக் கொண்டுச் செல்வார் எனத் தாங்கள் நம்புவதாக அது
குறிப்பிட்ட்து.
இதனிடையே, நேற்று இங்கு நடைபெற்ற பதவி ஒப்படைப்பு நிகழ்வில்
உரையாற்றிய மந்திரி புசார், சைபுல்யஸானின் ஆற்றல் மற்றும்
நிபுணத்துவம் எதிர்வரும் ஆண்டுகளில் எம்.பி.ஐ.யின் மதிப்பைக்
கூட்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகத்
தெரிவித்தார்.
மாநில அரசுக்கும் எம்.பி.ஐ.க்கும் இடையிலான ஒத்துழைப்பு சிலாங்கூரில்
நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பணி இலக்கை அடைவதில் பெரிதும்
துணை புரியும் எனவும் அவர் சொன்னார்.
சைபுல்யஸான் பெட்ரோனாஸ், டெலிகோம் மலேசியா, செல்கோம்
அக்க்ஷியாத்தா பெர்ஹாட் மற்றும் மத்திய கிழக்கில் பிரசித்தி பெற்ற
கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவத்தையும் அவர்
கொண்டுள்ளார்.




